2017-ன் ஆரம்பத்தில், விஞ்ஞான உலகம் ஒரு வருத்தமான அறிவிப்பைச் செய்தது. என்றும் இல்லாத அளவுக்கு இந்த உலகம் பேரழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகளின் குழு ஒன்று ஜனவரி மாதத்தில் அறிவித்தது. அழிவு எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக, அழிவுநாள் கடிகாரத்தின் நிமிட முள்ளை, அந்தக் குழு 30 வினாடிகள் முன்னுக்குத் தள்ளி வைத்தது. அதனால், இந்தக் கடிகாரம் இப்போது நள்ளிரவு நேரத்திலிருந்து இரண்டரை நிமிடங்கள் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. கடந்த 60 வருஷங்களில், உலகத்தின் அழிவு இவ்வளவு பக்கத்தில் இருந்ததே இல்லை!
2018-லும் இந்த உலகத்தின் அழிவு எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க விஞ்ஞானிகள் மறுபடியும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், வரலாறு காணாத ஓர் அழிவு வரும் என்பதை இந்தக் கடிகாரத்தால் காட்ட முடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா? இது ஒரு கஷ்டமான கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் பற்றி வல்லுனர்களுக்கும் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், இந்த உலகம் அழியும் என்று எல்லாரும் நம்புவதில்லை.
ஒளிமயமான எதிர்காலம் வரும் என்பதை லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள். மனிதர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்றும்... இந்தப் பூமி என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும்... நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த ஆதாரத்தை நம்பலாமா? இந்த உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?