கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்த இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.
இலங்கையின் வடக்கில் தொடரும் இராணுவ நில ஆக்கிரமிப்பின் ஓர் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றான கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் காணப்படுகின்றது.
வறணி – கொடிகாமம் வீதியில் குறித்த தென்மராட்சி பிரதேசத்திற்கான விடுதலைப்புலிகளது மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது.1996ம் ஆண்டு படையினரால் யாழ்குடாநாடு கைப்பற்றப்பட்டவேளை இம்மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் ரணில் – புலிகள் ஒப்பந்தத்தையடுத்து குறித்த மாவீரர் துயிலுமில்லம் மீளகட்டியெழுப்பப்பட்டிருந்தது.எனினும் 2008ம் ஆண்டினில் இராணுவத்தினால் அது மீண்டும் இடித்தழிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த மாவீரர் துயிலுமில்ல வளவில் படைத்தளமொன்றை அமைத்து படையினர் நிலை கொண்டுள்ளனர்.