வியாழன், 22 செப்டம்பர், 2016

ஈழத்துக்கு இதுவே இறுதி அஞ்சலி

ஈழத்துக்கு இதுவே இறுதி அஞ்சலி 
                                                                                        

ஈழத்தமிழா ... 

உன்னை நினைக்கும்போதெல்லாம் 
துக்கம்- துயரம்- துரோகம் -- 
தோட்ட விழுங்கிய துப்பாக்கியாய் ! தொண்டைக்குழிவரை - இன்று வெடித்துச் சிதறியது வார்த்தைகளாய் ! 

போர்குற்றமா ?, மனிதஉரிமை மீறலா ? இனப்படுகொலையா ? ???? 
ஊடகங்கள் நடத்தும் நாடகத்தில் 
விவாதம் மட்டுமே செய்தோம் 
வேறென்ன செய்தோம் ??? 

முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடித்துக்கொண்ட நம் உறவை திரும்பிப் பார்க்கிறோம் தேர்தலுக்காக ! 

உன் வாழ்கையை வாக்காக்க துடிக்கும் வர்த்தகத்தில் விலைபோகுமோ உன் வரலாறு ? 

புயலொன்று வந்தால் பூங்கொடிகள் அறுபடும் ! 
போரொன்று வந்ததுமே அறுந்துபோனதோ - நம் தொப்புள்க்கொடி ! 
அறுத்தது அரசியலோ , அந்நியனோ 
அகதிகளாய் , அனாதைகளாய் , அடிமைகளாய் சொந்தமண்ணில் சுவடுகளாய் - தமிழா ! 
இமயத்தில் ஒருநாள் பறந்ததும் உன்கொடியே 
இலங்கையில் பறக்குது இன்று உன் கோவணமே ! 

முள்ளிவாய்க்காளில் மூச்சிரைத்த இறுதிமூச்சின் சூளுரைகள் யாமறிவோம் ! 
அதை சமன் செய்யும் சாத்தியம் யாரறிவார் ? 
சூத்திரம் பலகண்ட சரித்திரம் எமக்குண்டு ! 
ஆயுதம் கொடுத்து ஆழித்த பெருமை யார்க்குண்டு ? தமிழா ? 


தனிஈழம் கேட்டதில் உன் தவறென்ன ? 
பொதுவாய் கிடைத்தது புதைகுழி மட்டுமே ! 

இனம் அழிந்த மரண செய்தியை செரித்து 
துக்கம் துடைத்து வாழும் -தமிழா 
தலைமுறைகள் தணிக்கை செய்யும் உன்வரலாற்றை - அதில் தனித்துவிடப்படுவாய் நீ தமிழன் சுயசரிதை சுயநலமாய் போனதோ ? 

புலம் பெயர்ந்த தமிழன் பெறும் பரிசுக்கு மார்தட்டும் தமிழா - உன் காலடியில் கட்டப்பட்ட எங்கள் கல்லறைக்கு கண்ணீரஞ்சலி மட்டுமா ? 

இந்தியர்களே எங்களை புறக்கணித்தார்கள் ஏன் ? 
ஈழம் இன்னும் தமிழ் பேசுவதாலோ ? 

எதிரியின் தோட்டாக்களுக்கு இதயத்தை பரிசளித்த என் இனமே ... இதுவரை என்ன செய்தோம் உங்களுக்கு ? 

மரணம் சிலகாலம் எங்களை மறக்கலாம் ஆனால் உங்கள் மரணம் எங்களை ஒரு காலமும் மன்னிக்காது ! 

இதுவரை என்ன செய்தோம் இவர்களுக்கு 
எழுதுவதற்கு மட்டும் நாம் என்ன -  
எழுத்தாணிகளா ?


மதி