தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை விடுதலை கிடைக்குமா? என்ற கேள்வி மீண்டும் தலையெடுத்திருக்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் 21 அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்கு மேலாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆயினும் விடுதலைக்கான வழி திறந்திருக்கின்றதா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். சிங்களப் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள தமது வழக்குகளை வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு மாற்ற வேண்டும். இதன் ஊடாகத் தமது விடுதலைக்கான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாகும்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதற்காக உண்ணாவிரதமிருந்து நடத்தப்படுகின்ற போராட்டம் 29 வருடங்களுக்கு முன்னரே மிகவும் வலுவான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்து, இந்திய அரசாங்கத்திடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் (இராசையா பார்த்திபன்) நடத்திய கடும் உண்ணாவிரதப் போராட்டமே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முன்னோடி போராட்டம் என்று குறிப்பிடலாம்.
திலீபன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் ஒப்பற்றது. தன்னையே ஒறுத்து தனது உயிரையே தியாகம் செய்த உன்னதம் மிக்கது. இதன் காரணமாகவே தியாக தீபம் என்று திலீபனைக் குறிப்பிடுகின்றார்கள்.
உலகுக்கு அஹிம்சையை அறிமுகப்படுத்தி, சாத்வீகப் போராட்டத்தை ஆங்கிலேய சாம்ராச்தியத்திற்கு எதிராக முன்னெடுத்திருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் அரசாங்கத்திடம், திலீபனுடைய உண்ணாவிரதம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்டது.
அஹிம்சைப் போராட்டத்தின் தந்தையாகிய மகாத்மா காந்தியை தேசபிதாவாகக் கொண்டிருந்த பாரத தேசத்திற்கே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் – சாத்வீகப் போராட்டத்தின் வலிமையை திலீபனுடைய போராட்டம் எடுத்துக் காட்டியிருந்தது.
பதினொரு தினங்கள் உணவும் இல்லை. நீரும் இல்லை. வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து, அணு அணுவாக சிதைந்து, தன்னையே ஆகுதியாக்கிக் கொண்டதே திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமாகும். மிகவும் உயர்ந்த நிலையிலான போராட்டமாக, உன்னதமான தியாகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.
திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பாரதப் பேரரசினால் உதாசீனம் செய்யப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது அந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கையாக அமைந்திருந்தது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசு முன்வராத போதிலும், பாரத தேசத்தின் அப்போதைய இலங்கைக்கான தூதுவராக – அந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்த டிக்சிற் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த திலீபனை சென்று பார்ப்பதற்குக்கூட மறுத்துவிட்டார்.
திலீபனைச் சென்று தான் பார்வையிட்டால், திலீபனின் உண்ணாவிரதம் கைவிடப்படுமா என்ற எதிர்க் கேள்வியை அவர் அப்போது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் வினவியிருந்தார்.
இந்தியத் தூதுவர் திலீபனைப் பார்த்தார் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படமாட்டாது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது முக்கியம் என்று அவருக்குத் தெளிவாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் திலீபனின் உண்ணாவிரதத்தைக் கண்டு கொள்ளவுமில்லை. அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுமில்லை.
மாறுபட்ட சூழல்
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறி, அந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் 1987 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திலீபனின் உயிர் பிரிந்தது. இதனால் அஹிம்சையின் பிறப்பிடமாகிய பாரத தேசத்தின் அன்றைய நிலைப்பாடு பலராலும் விமர்சிக்கப்பட்டது, கண்டனத்திற்கு உள்ளாகியது.
இந்த வகையில்தான் 29 வருடங்களுக்குப் பின்னரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ் அரசியல் கைதிகளினால் சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்காகவே திலீபனுடைய குரல் ஒலித்தது. அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றியும், ஏனோதானோ என்ற ரீதியில் மந்தகதியிலான நடவடிக்கைகள் காரணமாக, விடுதலையின்றியும் பல வருடங்களாக சிறையில் வாடுகின்ற தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.
திலீபன் கொள்கை மீது இறுக்கமான பிடிப்பைக் கொண்டிருந்த ஒரு போராளி. அந்த உண்ணாவிரதத்தின் தளமும், களமும் வித்தியாசமானது.
ஆனால், இப்போதைய தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத் தளமும், களமும் முற்றிலும் மாறுபட்டது. பலதரப்பட்ட நம்பிக்கைகளுக்கு மத்தியில் வித்தியாசமானதோர் அரசியல் சூழலில் இது மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும், தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத் தரப்பு அமைச்சர்களும்கூட சென்று பார்வையிடுகின்றார்கள். பார்வையிட்டிருக்கின்றார்கள்.
எல்லோரும் அவர்களுடைய கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்திருக்கின்றார்கள். அந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை, நியாயத் தன்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எத்தனையோ தடவைகளில் உறுதியளித்திருக்கின்றார்கள்.
ஆயினும் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதாகப் பதிவுகள் இல்லையென்பது சோகமானது. ஒரு வகையில் எரிச்சலூட்டுவதுமாகும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நாடெங்கிலும் உள்ள சிறைக்கூடங்களில் ஒரு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தார்கள்.
ஜனாதிபதியின் உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை
அதற்கேற்ற வகையில் அந்த விடயத்தில் தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக இது குறித்து தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அப்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார ஆகியோர் ஊடாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் அந்த உறுதிமொழியும் காற்றில் பறக்கவிடப்பட்டது. கைதிகளை விடுதலை செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஒருசில கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும், அந்த நடவடிக்கையும் பிசுபிசுத்துப் போனது. அரசாங்கத்தின் உயர் தலைவராகிய ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதியும் ஏமாற்று வித்தையாகிப்போனது.
இத்தகைய பின்னணியில்தான் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று கொண்டிருந்த இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை, ரயில் முன்னால் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அந்த மாணவன், ஓடும் ரயில் முன்னால் பாய்வதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியிருந்த ஒரு கடிதத்தில், அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இருக்கக்கூடாது என தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அந்த நேரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கையும் கைதிகள் முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டமும் மக்கள் மத்தியில் உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் உணர்வு பூர்வமாக எழுச்சி பெற்றிருந்தன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் செந்தூரனுக்கு தமிழ் அரசியல் கைதிகளாக உறவினர்கள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியல் கைதிகளுடன் எந்த வகையிலும் தொடர்புகள் இல்லாத அந்த மாணவன் அவர்களுடைய விடுதலையில் அக்கறையும் கவலையும் கரிசனையும் கொண்டு தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டமும், அது தொடர்பாக மக்கள் மத்தியில் பரவியிருந்த அனுதாப அலையும் அவரைத் தூண்டியிருந்தது. இதனை, அவருடைய மரணம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் அவர்களுடைய வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் விடயமும் உரிய கவனிப்பின்றி மந்தமாகிக் கிடக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும்போது, தலைவர்கள் அவர்களைச் சென்று பார்ப்பதும் ஆறுதல் கூறுவதும், உறுதிமொழி வழங்கி அவர்களுடைய போராட்டத்தை இடைநிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகின்றதே தவிர, அவர்களுடைய பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபாடாக இல்லை.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே, பொலிசார் ஆட்களைக் கைது செய்கின்றார்கள். இது சாதாரண நடைமுறை. குற்றச் செயல்கள் இல்லாவிட்டால் எவரையும் பொலிசார் கைது செய்வதில்லை.
ஆனால் ஒருவர் குற்றம் செய்திருக்கலாம் அல்லது குற்றம் செய்ய முயற்சித்திருக்கின்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் உட்பட முப்படையினருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் அதிகாரங்களை வழங்கியிருந்தன.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைத்து விசாரணை செய்யவும், அந்த விசாரணையின்போது அவர் தெரிவிக்கின்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராகக் குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிசாருக்கும் முப்படையினருக்கும் இந்தச் சட்டங்களின் மூலம் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
புலன் விசாரணைகளிலும், வழக்கு விசாரணைகளிலும் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் கைது செய்யப்பட்ட ஒருவர் குற்றவாளியாகக் காணப்படும் வரையில் பல வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். தண்டனை அனுபவிக்கின்றார்கள். இந்தத் தண்டனை நீதி விசாரணைகளின்போது பெரும்பான்மையான வழக்குகளில் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.
குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒருவர் அதற்கு முன்னர் அனுபவித்த தண்டனை வெறும் தண்டனையாகவே இருக்க, குற்றச் செயலுக்கான சிறைத் தண்டனை முழுவதையும் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அவர் அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்.
அதேநேரம் வழக்கு விசாரணையில் ஒருவர் நிரபராதியாகக் காணப்பட்டால், அது வரையில் அவர் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் குற்றம் செய்யாமலேயே அனுபவித்த தண்டனைக்கு எந்தவித நிவாரணமும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை.
குற்றச்சாட்டுக்களைக் குறைப்பதற்கு நடவடிக்கையாம்
இத்தகைய பின்னணியில்தான், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், சிறைக் கைதிகளை விடுதலை செய்வது நீதிமன்றங்களின் கடமையென்றும் சிறைச்சாலைகள் அமைச்சராகிய தனக்கும் அதற்கும் எந்தவிதமான பொறுப்பும் கிடையாது என்று ஒரு முறை கைவிரித்திருந்தார்.
அதே அமைச்சர்தான் 23 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அது மட்டுமல்லாமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கைதிகளின் குற்றச்சாட்டுக்களைக் குறைத்து அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே தமிழ் அரசியல் கைதிகள் ஆவர். அரசியல் காரணங்களுடன் தொடர்புடைய குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற காரணத்திற்காகவும், அத்தகைய குற்றங்கள் புரிந்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயுமே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அரசாங்கம் இவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள். அதனால், அவர்கள் பயங்கரவாதிகள், பயங்கரக் குற்றவாளிகள் என்று அரச தரப்பில் வியாக்கியானம் செய்யப்படுகின்றது.
இப்படியான நிலையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது, நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பது குற்ற நடவடிக்கை முறைகளை அரசாங்கம் தனக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளாகவே நோக்க வேண்டியிருக்கின்றது.
குற்றம் செய்யாத ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது. குற்றம் சுமத்துவதற்குக் காரணங்கள் இருக்கவேண்டும்.
சந்தேகச் சூழலில் ஒருவர் மீது குற்றம் சுமத்தினாலும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவரை நிரபாராதி என்றே கருத வேண்டும் என்பது நீதித்துறையின் நடைமுறையாகும்.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படுபவர்களை குற்றவாளிகளாகவே அரசாங்கம் கருதிச் செயற்படுகின்றது. அதன் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக முறையான நீதி விசாரணைகளின்றியும், விடுதலை செய்யப்படாமலும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.
தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களயும், அவர்களுக்கு உதவினார்கள் ஒத்துழைத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களயும், அரசியல் கைதிகளாக ஏற்க மறுத்து, அவர்களைப் பயங்கரவாதிகளாக நோக்கி, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமாக மாட்டாது.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பயங்கரவாதச் சூழல் நாட்டில் இப்போது இல்லை. பயங்கரவாதம் தலையெடுப்பதற்கான சூழலும் கிடையாது என அரசாங்கமே கூறி வருகின்றது. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை இழுத்தடித்து, அவர்களை வேண்டுமென்றே தண்டிக்க வேண்டும் என்ற வகையில் குரூர நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவது நல்லதல்ல.
நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என கூறிக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காமலும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வது உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் உதவமாட்டாது என்பதை மறந்துவிடலாகாது.