புதன், 23 ஆகஸ்ட், 2017

உருகும் உறவுகள்


கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலாவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .


தந்தையை தேடும் குழந்தையும்

தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .


சீதுவையில் நினைவு தூபியாம்

சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன் சொல்லுங்களேன் .?


கற்பழிக்கப்பட்டார்களா -இல்லை உடல் கருகி மண்ணில் வீழ்ந்தார்களா .?

பாழும் கிணற்றில் போட்டீர்களா -இல்லை
உடலை
பாதி அறுத்துத்திண்டீர்களா.?


துடிக்கவைத்து ரசித்தீர்களா -இல்லை

சுடு நீரில்
அவித்தீர்களா .?


எம் வினாக்களுக்கு

விடையில்லை
வேதனைகளுக்கு
முடிவில்லை .


நெஞ்சம் பிளந்திட அழுகின்றோம் -அவர்கள்

நினைவுகள் வதைத்திட துடிக்கின்றோம்
விழி நீரில் மாலை தொடுக்கின்றோம்
-எம்மவர்
மீண்டு வருவார் என்று
வாழ்கின்றோம்.


அண்ணன் தம்பியரே கேளுங்களேன்

எம் அவலத்தை உலகிற்கு எடுத்து
செல்லுங்களேன் .
-----காணாமல் போன உயிர்கள் எல்லாம்
எங்கே போனது....


கொடும் யுத்தத்தால் அழிந்த

உயிர்கள் போக -மிகுதி
அவர்களை நினைத்து உருகி அழிவதை பாருங்களேன் .







செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நவீன தாலாட்டு

நவீன தாலாட்டு

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

திங்கள், 21 ஆகஸ்ட், 2017


சொா்க்கத்தில் ஒரு நாள் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆகிய இருவரும் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பாா்கள் என்று கற்பனையாக......

MGR
வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?
ஜெ
புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள்
குடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.
MGR
மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்?
ஜெ
உடல்நிலை சரியில்லை என்று!!!
MGR
அமெரிக்கா சென்றாயா?
ஜெ
அப்பல்லோவுக்கு சென்றேன்!
MGR
அதுபோதுமே” சொர்க்கத்துக்குவர
ஜெ(சோகமாக)
மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை
புறப்பட்டு வந்து விட்டேன்.
MGR
நம்கட்சி.
ஜெ
கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா
MGR
நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்..
ஜெ
ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று ,
நான் இல்லாத வேதனையில் இன்று.
MGR
நண்பர் கருணாநிதி
ஜெ
ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.
MGR
நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?
ஜெ
முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை.
(அப்போது சோ வருவதைப்பார்த்து)
MGR
அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே
சோ(சிரித்தபடி)
நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
(ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு
அங்கென்ன வேலை?
MGR
அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!
சோ
நாடோடி மன்னா …இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?
MGR
(சோ முதுகில் தட்டிக்கொடுத்து)
இங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது .
அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு தந்தை  தன்னுடைய ஆசை மகனுக்கு எழுதிய உருக்கமான கவிதை....


தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


By...mathees