மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக தமிழர் தாயகத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது உலகெங்கும் தொழிலாளர்கள் தினமாக குறிப்பிட்ட தினம் அமையப்பெற்றிருக்கின்றது.
மே தினத்திற்கும் மே மாதத்திற்கும் தமிழ்மக்களிடையே மிகவும் ஒரு பெரிய தொடர்பொன்று இருக்கின்றது என்பது மிக முக்கியமான விடயம்.
மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக, தொழிலாளர்களின் உரிமைக்காக, ஆரம்பத்திலே 1886ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மே எழுச்சி என்பது இன்று தொழிலாளர்களை மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஒரு மே மாதமாக மாறியிருக்கின்றது.
ஐரோப்பாவில், சர்வதேசத்தில் பல இடங்களில் காணாத ஒரு விடயம் இலங்கை அரசாங்கத்தினாலும், இலங்கை அரசியலில் இன்று மே மாதம் என்பது அரசியல் ரீதியாக அரசியல் வாதிகளுக்கு அறிமுக விழாவாகத்தான் இன்று பார்க்கப்படுகின்றது.
இன்று தொழில் வாய்ப்பு இன்றி வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள் கல்வி பயின்றும் தொழில்வாய்ப்பற்ற நிலையில் உண்ணாவிரதமிருக்கும் நிலையில் மே மாதம் என்பது தொழிலாளர்கள் உரிமைக்காக அல்ல அரசியல் வாதிகள் தங்களுடைய அறிமுகத்திற்காக பயன்படுத்துகின்ற ஒரு விழாவாக பார்க்கப்படுகின்றது.
யுத்தம் நடந்துகொண்டிருக்கும் பொழுது மே மாதத்தில் தொழிலாளர்கள் தினம் நடாத்தப்பட்டது. அங்கு மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டிருக்கும் போது இங்கே அரசியல் வாதிகள் கொழும்பில் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் தங்களுடைய அரசியல் ரீதியான வெற்றி விழாவை கொண்டாடுவதாக இருந்தார்கள்.
அப்போது பதுங்கியிருந்த தமிழ் அரசியல் வாதிகள் குரல் கொடுக்காதவர்கள் இன்று தங்களுடைய சொந்த இலாபத்திற்காக மே மாதத்தை கையில் எடுத்து தாங்கள் முன்னுக்கும் தொழிலாளர்களை பின்னுக்கும் வைத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்று கிட்டத்தட்ட அம்பாறை மாவட்டத்தில் தொடங்கி யாழ்ப்பாணம் மட்டும் இருபத்தையாயிரம், ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பின்றி பட்டதாரிகள் வீதிக்கு வந்து இன்று உண்ணாவிரதம் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தம் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாத எம்மவர்கள் இன்று மே மாதம் என்னும் ஒரு எதிர்கால தேர்தலை மையமாக வைத்து இன்று மே மாதம் என்ற ஒரு நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் வாதிகள் தங்களை அறிமுகப்படுத்துவதற்காக தங்களுடைய சகாக்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் எதிர்கால அரசியலை மையப்படுத்தி இந்த மே மாதத்தினை பயன்படுத்துகின்றனர்.
இலங்கையில் தொழிற்சங்கத்தை முப்பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகள் வைத்திருக்கின்றன. அதிலும் ஜெவிபி ஆனது தொழிலாளர்களுடைய மேம்பாடு சம்பந்தமாக தொழிலாளர்களுடைய உணர்வுகள் சம்பந்தமாக பாடுபடுகின்ற கட்சியாக இருக்கின்றது. ஆனால் எமது எந்தவொரு தமிழ் கட்சிக்கும் தொழிலாளர் சங்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது மனவருத்தத்திற்குரிய விடயமாக இருக்கின்றது. காரணம் என்னவென்றால் இன்று நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. உண்மையான தொழிலாளர்களூடாக மட்டும் கொண்டாடப் படுகிறதுதான் தொழிலாளர் தினம்.
ஆனால் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. இன்று சிங்கள அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் பல அடக்கு முறைகளை செய்துகொண்டிருக்கின்றது. எங்களை கேட்காமல் எங்களுடைய பிரதேசங்களை அகலக்கால் வைத்து எங்கள் வளங்களை சுரண்டி எங்களுக்கு கிடைக்க வேண்டிய வழங்களை அபகரித்து விட்டு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை கொடுக்காமல் சொற்பக் காசுகளை கொடுத்துவிட்டு இந்த தொழிலாளர் தினம் கொண்டாடுவதில் என்ன நியாயம்.
சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக பிரமாண்டமான தொழிலாளர் தினம் இம்முறை எடுக்கப்படுகின்றது. மூவின மக்களும் இருக்கின்றார்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய விடயங்கள் கொடுக்கப்படுகின்றது. ஆகையினால் இந்த விடையங்கள் அனைத்தையும் விட்டு எங்களுக்கு ஜிஎஸ்ரி பிளஸ் தரவேண்டும் என்ற ஒரு மாயைக்காக எம்மவரும் ஒத்துப்போவது மிகவும் வருந்தத்தக்கது. ஆகையினால் இந்த தொழிலாளர்களுடைய அடிமட்டப் பிரச்சினைகள் தீர்க்கபட்டு அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும் இந்த மே தினக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை .
யாரையும் குற்றம் சொல்லவில்லை யாரையும் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்க்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். அதை விடுத்து ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயங்களுக்காக நாங்கள் பேசி அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும் அல்லது இந்த பட்டதாரி மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இல்லையே எங்கள் நிலங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்காக நாங்கள் ஒன்றுதிரண்டு போராடிமேயானால் எமக்கு வெற்றி நிச்சயமாக கிடைத்திருக்கும்.
இவை அனைத்து பிரச்சினைகளும் இருக்கத்தக்கதாக மே மாதத்தில் நாங்கள் விசாலமாக மேடைபோட்டு அரசியல் பற்றி பேசுவது அநாகரீகமானது. இம் மாதம் என்பது தமிழ் மக்களின் கறுப்பு மாதமாக, தொழிலாளர் தினம் எவ்வளவு ஒரு மேன்மை பொருந்தியதோ அதே போல் சர்வதேசத்திற்கு இன அழிப்புக்காக சென்ற ஒரு மாதம் தான் மே மாதம். மேமாதம் என்பது தமிழர்களின் ஒரு வருந்தத்தக்க காலத்தில் அழியாத ஒரு நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விழித்தெழுவோம், ஒன்றுபடுவோம், எங்கள் உரிமைக்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்