அன்டைக்கு ஒரு புதன்கிழமை. காலமை 11.42 மணியிருக்கும்! கொழும்பு 7ஆம் இலக்க உயர் நீதிமன்றத்திலை வைச்சுத் தீர்ப்பு. 94 குற்றச்சாட்டுக்கள் என்மீது. அதில் 93 குற்றச்சாட்டுக்களுக்கு ஆயுள் தண்டனைகள்.
94ஆவது குற்றச்சாட்டுக்குப் பத்து வருடச் சிறை. ஆக, ஆயிரத்திச் சொச்ச வருசங்கள் சிறை என்று தீர்ப்புச் சொன்னார்கள்.
வெளியே என்னை நம்பி இருக்கின்ற மனைவி, பிள்ளைகளின் நிலை? அவர்களோடு சேர்ந்து வாழலாம் எண்ட நம்பிக்கையோட காத்திருந்து, அவ்வளவு காலமும் தண்டனையத் தூசாக அனுபவிச்சனே…?’
2008ஆம் ஆண்டிலிருந்து சிறை வாழ்க்கை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு அவனைப் பொசுக்கியே விட்டது.
அவன் சாகும் வரை மட்டுமல்ல இனி எத்தனை பிறவிகளெடுத்தாலும் சிறையே தயவு என்றிருக்கிறது சட்டத்தின் தீர்ப்பு. ஆனால் இதைவிடவும் பல கொடுந்துயர்கள் தன்னைக் குறிபார்த்துக் காத்திருந்ததை அவன் அறியவில்லை.
‘மகசின் சிறைச்சாலை தான். அண்டைக்குக் காலமை பத்து மணியிருக்கும். எஸ்.எம். பிராஞ்சிலை இருந்து இன்ஞ்சார்ச் ஒருத்தர் வந்தார்.
யோகராணின்ர மனிசன் ஆரு? எண்டு கேட்டார். நான் தான் எண்டு சொன்னன். நேற்றைய தினம் உங்கட மனைவி காலமாகி விட்டார். கிளிநெச்சி பொலிஸ் ஸ்ரெசனிலை இருந்து பக்ஸ் வந்திருக்கு’ என்று சொல்லி முடிச்சார். தீர்ப்பை நினைச்சு நினைச்சு அழுது முடிக்கேல்லை. எனது மனைவியும்…? (அழுகையைத் தவிர அவரிடம் வேறு எதுவும் இல்லைத்தானே).
‘மனைவி மக்களோடு சேரலாம் என்றிருந்த எனக்கு இப்போது என் மனைவியும் இல்லை. அவளைக் கைபிடித்தது முதல்… (அழுகை அதிகமாகியது). அவளோடு வாழக் கிடைக்காமல் உயிர் வாழவேண்டியிருக்கிறதே. அழுவதற்கு நேரம் தேடுவதா? மடியில் வந்து அமர்ந்து எனது தயவை வேண்டிப் பரிதவிக்கும் என்ர பிள்ளைக்குப் பதில் சொல்லுறதா?’
ஒரு மனிதன் எத்தனை துயரங்களைத் தான் தாங்குவது? அவனைத் துண்டு துண்டாக வெட்டிப் ‘பங்கு’ போட்டுக்கொண்டிருக்க அதை அவனே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவனிலிருந்து கிழித்தெ டுக்கப்படும் தசைகளில் உயிர்த்துடிப்பும், குருதிச் சூடும் இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது.
துரதிஷ்டசாலி யான அவன் தான் சதைத் துண்டுகளாக்கப்படும் வலியை மறந்து மனைவியை இழந்து, மகளின் பரிதவிப்புக்கும் பதில் சொல்ல முடியாமல் நட்டாற்றில் நிற்கிறான்.
இதுவே அரசியல் கைதியாக்கப்பட்டிருக்கும் ஆனந்தசுதாகரின் நிலை. பெயரில் மட்டும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கிறது.
ஆனால் மலைபோல் இறுமாப்புடன் உயர்ந்து நிற்கின்றன அவனைச் சூழ்ந்து கௌவிக் கொள்ளப் போகின்ற கொடுந்துயர்கள்.
‘2017ஆம் ஆண்டு நவம்பர் மாசம் 8ஆம் திகதி. அண்டைக்குத்தான் என்னிலை சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான அந்தத் தீர்ப்பைச் சொன்னார்கள். கேட்ட உடனேயே நான் இடிஞ்சு பேனன்… மனிசி, பிள்ளையளைப்போய்ப் பாக்கலாம் எண்டால்…’
2008ஆம் ஆண்டு 4ஆம் மாதம்; 25ஆம் திகதி. இரவு 9.15அளவில் தேல்ன்தற எனுமிடத்தில் வைத்துப் பிலியந்தலைப் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட போது ஒன்றன்மேல் ஒன்றாக அடுத்தடுத்துத் தன்னை ஆட்கொள்ளப்போகும் இத்தகைய ரணங்களைப் பற்றிச் சுதாகர் அறிந்திருக்க வாய்ப்பில்லைத் தான்.
‘நாங்கள் பேசித்தான் கலியணம் முடிச்சனாங்கள். வருமானம் குறைவெண்டாலும் வாழ்க்கை பரவாயில்லாமல் சந்தோசமாப் போய்க் கொண்டிருந்தது. நல்லதொரு மனிசி எனக்குக் கிடைச்சாள். கஸ்ர, துன்பம் பாக்காது தானும் உழைக்கக் கூடியவள். கனி பிறந்து (கனிதரன்) அவனுக்கு ஒரு வயது நடந்துகொண்டிருக்க வேணும். சகி அப்ப கைக்குழந்தை(சங்கீதா).
அவள் பிறந்த அதே மாதம் தான். பிறந்து ஒரு ரெண்டு கிழமை கழிச்சு என்னைப் பிடிச்சது. அதிலை இருந்து சிறை வாழ்க்கை தான். கல்கிசைச் சிறையிலை இருக்கேக்க வாணி(யோகராணி), சகியையும் தூக்கிக் கொண்டு என்னப் பாக்க வருவா…. என்ர பிள்ளையளை இப்பிடி இருந்திட்டு இருந்திட்டுப் பாக்கேக்க சரியான சந்தோசமா இருக்கும்.
விசாரணையும் சிறைக்குள்ள இருக்கிறதுமா வாழ்க்கை ஓடிச்சுது. ஆனா இடையிலை ஒரு சம்பவம் நடந்தது. 2008ஆம் ஆண்டு. என்னைப் பிடிச்சுக் கொஞ்ச நாள் கழிய. ஜுலை மாசம்.
19ஆம் திகதி இரவு ஏழு மணியிருக்கும். ஒரு 120பக்கம் வரையில இருக்கிற ஒற்றையில கையெழுத்து வாங்கிச்சினம். 21ஆம் திகதி றிமைன் பண்ணுறதாச் சொல்லிச்சினம். பிறகுதான் கோட்சிலை நீதிபதி சொன்னார்.
இந்தக் குற்றத்தை நிரூபிக்கக் கூடிய வலுவான சாட்சிகள் இல்லாத பட்சத்தில் என்னுடைய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வைச்சு எனக்குத் தண்டனை அளிப்பதாக…? நான் வருவன், வருவன் என்று பாத்துக்கொண்டிருந்த வாணிக்கு நான் என்னத்தச் சொல்லுறது…? அவளுக்கு இதைப் பற்றி எதையுமே நான் சொல்லேல்லை… நான் ஜெயிலுக்க வந்த காலத்திலை இருந்து அவள் வருத்தக்காறியாப் போயிற்றாள்.
எத்தினையோ தரம் ஹொஸ்பிரல்ல அவசர சிகிச்சைப் பிரிவிலை கிடந்தாள். இப்பிடி இடிஞ்சு போயிருக்கிற அவளுக்கு எப்பிடி இந்தத் தண்டணையைப் பற்றிச் சொல்லுறது…? சொன்னால் அவள் தாங்க மாட்டாள் எண்டுறது எனக்கு நிச்சயமாத் தெரியும். மறைச்சு மறைச்சுக் கடசியா அவளுக்கு அது தெரிஞ்சு போச்சுது… சாகிறதுக்கு இருபது நாளுக்கு முதல்தான் எனக்குத் தீர்ப்பாகின விசயம் தெரிஞ்சிருக்கு… அவள் அண்டைக்கே செத்துப்போயிற்றாள்…’
‘15ஆம்திகிதி… 16ஆம் திகதிதான் வந்து சொன்னார்கள்… 17ஆம் திகதி இரவுபோலை மகசினிலையிருந்து கொண்டு போய்ச்சினம். யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு… 18ஆம் திகதி வீட்டை கூட்டிக் கொண்டுபோய்ச்சினம்… நான் வருவன் வருவன் எண்டு பாத்துக் காத்திருந்த மனிசி கண்ணுக்கு முன்னால செத்துப் போய்க்கிடக்கு… கையாலாகாத பாவியான என்னால என்ன செய்ய முடியும்…? ஏராளம் சடங்குகள் செய்திச்சினம்.
என்னையும் செய்யச் சொல்லிச்சினம். மகன்தான் எல்லாமும் செய்தான். நான் பாவியாகப் பாத்துக்கொண்டிருந்தன். மகள் வந்து மடியிலை ஏறி இருந்திற்றாள். அம்மா இல்லையெண்டு கவலைப் படக்கூடாது அப்பா இருக்கிறன் எண்டு எப்பிடிப் பிள்ளைக்குச் சொல்லுறது…? மகளோடை என்னத்தைக் கதைக்கிறது…? மூண்டு மணித்தியாலயம் கழிஞ்சிருக்கும்…! கூட்டிக்கொண்டு வந்த பொலிஸ்காரர் வாகனத்திலை ஏறச்சொல்லிச்சினம்.
மகளும் பின்னாலை வந்து ஏறிற்றாள். அவளைக் கட்டியணைச்சுக் கொஞ்சினன். அப்பா திரும்பி வந்திருவன் குழப்படி செய்யாமப் படிக்க வேணும். அம்மா இல்லையெண்டு கவலைப்படக்கூடாது எண்டு சொல்லி அவளை இறக்கி விட்டிட்டு வந்தன். அம்மம்மா, அப்பம்மாக்களிட்டை என்ர பிள்ளையளைக் கவனமாப் பாருங்கோ எண்டும் சொல்லிப்போட்டு வந்தன்…’
இப்போது நான்கு சுவர்களுக்கு நடுவில் சுதாகர்… என்ன செய்து கொண்டு…? சிந்தனைகள் எப்படியிருக்கும்…? கற்பனைக்கும் எட்டாத அந்த வலிகளின் குவியலை எப்படித்தான் எம்மால் சொல்ல முடியும்…?
தனது தந்தையின் பெயரை அழுத்தமாக எழுதிக்காட்டினாள் சங்கீதா. ‘உங்களுக்கு அப்பாவை எப்போது தெரியும்?’ எனக் கேட்டதும் துரு துருவென வீட்டுக்குள் ஓடிய அந்தப் பிஞ்சு சென்ற வேகத்திலேயே ஒரு போட்டோவைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தது.
அதில் ஆனந்தசுதாகரும் மனைவி யோகராணியும் நின்றிருந்தார்கள். அவர்களுடைய திருமண நிகழ்வுகளின் பிற்பாடுகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் போல் தெரிந்தது. அதைக் காட்டிய பிள்ளை, ‘இந்தப் படத்திலை தான் அப்பாவை அம்மா முதல் முதலில் எனக்குக் காட்டினவா. அதுவரைக்கும் எனக்கு அப்பாவைத் தெரியாது. அப்பா எப்பிடியிருப்பார்? எண்டு அம்மாட்டக் கேட்ட, அவர் நல்ல வெள்ளையா இருப்பார், வடிவான அப்பா எண்டு சொல்லுவா, பிறகு சிறைச்சாலையிலையும், நீதிமன்றத்திலையும் போகேக்கதான் அப்பாவக் கண்டனான்.
அப்பாவுக்குப் புட்டும் நெத்தலிக் கருவாடும் எண்டால் சரியான விருப்பம்… பாக்கப்போகேக்க அம்மா செய்துகொண்டு வருவா, இப்ப அம்மாவும் இல்ல… அப்பாவும் வந்திற்றுப் போட்டார்’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தது அந்தப் பிஞ்சு. அம்மம்மாவின் அருகில் போய் அண்ணன் தஞ்சமைடைந்திருக்க சங்கீதாவும் அவர் அருகில் போய் நின்று கொண்டாள்.
கொழுந்து விட்டெரியும் வெயில் கனன்று கொண்டிருந்தது. விழுந்தொழும்பிச் செல்லும் வாகனங்களின் போக்கில் எழுந்த தூசிப்படலங்கள் அந்த வீதியெங்கும் தொங்க விடப்பட்டிருந்த வாணியின் உருவப்படத்தில் படிந்து கவலை காட்டின.
கணவனைக் கைது சென்று கொண்டு சென்றதிலிருந்து பெரும் சிரமங்க ளுக்கு மத்தியிலும் தனி ஒரு பெண்ணாகத் தனது குடும்பத்தைப் தாங்கி நின்று அவள் நிகழ்த்திய போராட்டங்கள் அவளுடைய மூச்சடங்கிப் போயும்கூட அவளுக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை.
வாணியைப் போன்ற இன்னும் பல பெண்களுடைய உயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் வாசனைகளையும் காற்றுச் சுமக்க வேண்டியிருக்கிறது.
அப்போது காற்றுக் கனமடைந்து கண்ணீர் கூடச் சிந்தலாம்… அம்மா கடவுளிடம் சென்று விட, அப்பா அரசின் கைகளில் இறுகிப் போயிருக்க, பரந்து கிடக்கின்ற கால வெளியை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறார்கள் அண்ணனும் தங்கையும்.