வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஏழை விவசாயியின் ஏக்கம்


ஏற்றங்களில் ஏறி நின்றும் 
என் வாழ்வில் ஏற்றம் மட்டும் 
எட்டிப் பார்க்கவேயில்லை… 

உயர உயர மரம் வளர்த்தும் 
என் வாழ்வில் உயர்வு மட்டும் 
உயர்வாய் இருந்ததேயில்லை… 

பசுமைகள் பல படைத்தும் 
என் வாழ்வில் சுமையை தவிர 
பசுமையை பார்த்ததேயில்லை… 

எதையும் குறையில்லாமல் நான் படைத்தும் 
என்னை மட்டும் படைத்துவிட்டான் 
எல்லாம் குறையாய்.. 

“உயர உயர பறந்தாலும் 
ஊர்க்குருவி பருந்தாகாது” 
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது. 

எவ்வளவுதான் உழைத்தாலும் 
ஏழையாகவே இருக்கும் 
என் வாழ்வில்…! 

ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்.. 
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்.. 

விளைத்தவன் நானிருக்க… 
விலை சொல்ல அவன் யார்..? 

கால்கள் ஆடி திரிந்த என் நிலத்தை 
கால் அடி மனையாய் கூறுபோட அவன் யார்..? 

பயிர் செய்ய நிலமில்லை-எனக்கு 
உயிரோடு இருக்க மனமில்லை 

வெட்டிப்போட்ட என் நிலங்களைக் கண்டு 
வேதனையில் வெட்டி சாகிறேன்.. 

கட்டிப்போட்ட கைகளை கண்டு 
தட்டி கேட்க யாராவது வருவீர்கள் என்று… 

நான் 
விதைத்த விதைகள் 
மண்ணிலும் மனதிலும் வளர 
உயிரை உரமாக்கி உறங்குகிறேன்.. 
உறங்காத நினைவுகளுடன்…….. 

-ஏழை விவசாயி 

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

இது காதலர்களுக்கான கல்லறைத் தோட்டம்...!



காதலெனும்
 கடலில் விழுந்து
 மூர்ச்சையாகி
 மூழ்கிப் போனோர் பலர்...


*  காதலெனும்
 காட்டாற்றில் சிக்கி
 சின்னா பின்னமாகி
 கரை ஒதுங்கியோர் பலர்...



*  காதலெனும்
 காந்தர்வ மலையேறி
 திக்கு திசை தெரியாமல்
 காணாமல் போனோர் பலர்...



*  காதலெனும்
 காளவாய்க்குள் விழுந்து
 கரிக்கட்டையாய்
 வெந்து போனோர் பலர்...


*  காதலெனும்
 புதைகுழிக்குள் விழுந்து
 உயிருடன்
 புதைந்து போனோர் பலர்...


*  காதலெனும்
 சாக்கடைக்குள் விழுந்து
 சகதியில் மூழ்கி
 சமாதியானோர் பலர்...


* ஒரு வழிப்பாதையில்
 சென்ற பலர்
 மாண்டதாக
 வரலாறு உண்டு...
 மீண்டதாக
 சரித்திரம் இல்லை...


* காதலெனும்
 மாய உலகத்தின்
 முன்புறம்-
 பூவாடை வீசும்
 பூங்காவனம்...
 மனதை மயக்கும்
 மயங்கி விடாதீர்கள்...


* பின்புறமோ...
 பிணவாடை வீசும்
 கல்லறைத் தோட்டம்...!

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தாண்டு சிறப்புக் கவிதை : இதயம் ஒரு வெற்றுக் காகிதம் 2017


தயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
னவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!

சைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!

னி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!

துநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.

ல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை !
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!

நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!

ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் !.

இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!

திர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.

நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.

நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .

புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!
அனைத்து ஈழத்து மக்களுக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......
உங்கள் அன்பு மதி