வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...

நெகிழ வைத்த ஒரு கவிதை : "அப்பா..."
 அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...



முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

சிறைப்பட்ட சுவாசங்கள்


கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!

டல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
முள்வேலி முகாம்களில்
தோட்டாக்களின் சத்தங்களும்,
தமிழனின் கதறல்களும் மட்டுமே
இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது
நிசப்த இரவுகளிலெல்லாம்
தனிமை என்ற பெயரில் .!

ரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்
சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறது
உள்ளம் .!

தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !

றந்த உடலென்று உணராத
குழந்தையொன்று  அங்கு

அழுகை நிறுத்தி கொங்கைகளை
 சவைந்துகொண்டிருக்கிறது .

காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று .

ஞ்சியதை இழுத்து செல்ல
எதிர்பார்புகளை எல்லைகளில்
நிறுத்தி காத்திருக்கும்
ஓநாய் ஒன்று .

வர்களின் உயிர்களை எல்லாம்
குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்
ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள் . என
ஒவ்வொன்றாய் பார்த்து ரசித்த இரவொன்று
இறந்துபோனது பகலை பிரசவித்த
சில நொடிகளில் !!!!....

பேருந்தில் ஜன்னலோர இருக்கை வழக்கமான பாதை இருப்பினும்

பேருந்தில்
ஜன்னலோர இருக்கை
வழக்கமான பாதை
இருப்பினும்
சற்றும் சலிக்காமல் வெளியே
ரசித்துக்கொண்டிருந்தன
இரு விழிகள் !


திடிரென்று இரு விழிகளும்
வலித்தன
ஒரு பேருந்து நிலைய வளைவில்!

கூவி கூவி அனைவரையும்
அழைத்துகொண்டிருந்தது
அந்த பத்து வயது உதடுகள்!

ஒளி மின்னும்
சிறு நாவல் கனிக்கு பின்னால்
ஒளி இழந்த முகத்தோடு
அந்த சிறுவன்!

யாராவது தன் அருகில்
வருவார்களா
வயிற்று பசிக்காவது
வழி செய்வார்களா
என்ற ஏக்கத்தில் விழிகள் !

நாவல் கனியை சுவைத்து உண்ண வேண்டிய
மனம்
ரணமாய்
கனிகளோடு கெஞ்சிக்கொண்டே இருந்தது!

சற்றென்று கடந்ததது
பேருந்து மட்டுமே
என் மனது அங்கேயே
பயணித்துக்கொண்டிருந்தது.....
     
                                       கவிமதி

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு தந்தை தன்னுடைய ஆசை மகனுக்கு எழுதிய உருக்கமான கவிதை....


தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே
என் மகன் நல்லவன்...!!!

ஆக்கம். மதி